×

சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

சென்னை: மக்களவைத் தேர்தலை ஒட்டி சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளதால், தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என 3 நாடாளுமன்ற தொகுதிகள் அடங்கும். அதில் 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 39 லட்சத்து 25 ஆயிரத்து 144 வாக்காளர்கள் உள்ளனர். அதன்படி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னையில் 35 வேட்பாளா்களும், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும், மத்திய சென்னையில் 31 வேட்பாளர்களும் களம் காணுகின்றனர். இந்நிலையில் சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் பாரதி மகளிர் கல்லூரியில் சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் முன்னிலையில் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடைபெறுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி அனைத்து தேர்தல் பணிகள் நடைபெறுகிறது. பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்னும் 2-3 நாட்களில் நிறைவடையும் இவ்வாறு கூறினார்.

The post சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Lok Sabha elections ,Tamil Nadu ,
× RELATED கல்லூரிகளில் வாக்குப்பதிவு...